96′ படத்தின் ராம் என்றவுடன் நமக்கு நியாபகம் வருவது ஜானு. அவள்தான் ராம் நமக்கு காட்டிய உயிர், காதல், கவிதை, இசை, மழை. ஒரு வெறுப்பான களைப்பான நாளில் அவனுக்கு ஜானுதான் எல்லாம். ஆம்! அனல்காற்றின் கூட்டிற்குள் பரவுகிற சிலிர்காற்றின் சாயல்தான் ராமுக்கு ஜானு.
ஒரு காதலை இழந்த பிறகு வலியும் வெறுமையும் நிச்சயம் வரும் ஆனால் அதை ராம் கையாளுகிற விதம் அழகியல். வலிகளையும், வெறுமையையும், ஏக்கங்களையும் தாண்டி ஜானுவின் இருப்பை நினைத்து வாழ்வை ரசித்து வாழ்கிறவன்தான் நம்ம ராம்.
நமக்கு காட்டப்பட்ட பாடல் காட்சிகளில், படங்களில் பெரும்பாலானவை காதலை மறப்பதற்காக பயணம் மேற்கொள்கிறார்கள் என்றவாறே காட்டப்பட்டிருக்கும் அதில் தவறொன்றுமில்லை அதுவும் எதார்த்தம் கலந்த உண்மைதான் ஆனால் LIFE OF RAM – பாடல் சற்றே வித்தியாசமானது அவன் பயணம் மேற்கொள்கிறான் அதேசமயம் அவன் தன் காதலை தன்னுடன் வைத்துக்கொண்டே பயணப்படுகிறான். இப்பாடல் காட்சியின் இறுதியில் ராம் தன் பெயரையும் ஜானுவின் பெயரையும் மணலில் எழுதுவான். அங்கேயே நமக்கு புரிந்துவிடும் ராம் அவளை மறக்க முயற்சிக்க கூட இல்லை என்பது.
Life of Ram
புதுசா வாங்கின புத்தகத்த திறக்கும்போது வருகிற வாசனை மாதிரிதான் எந்நாளும் ராமுக்கு ஜானுவின் மீதான காதல், வருடங்கள் கழித்தும் கூட ஜானுவின் மீதான அவன் காதல் புதியதாய் வாசம் வீசும் ஆனால் ஓரே வாசம்தான் ‘காதல் வாசம்’.
‘ஜானுவ உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு’ ராமை பார்த்து கேள்வி கேட்டால் பதில்கூற தயங்குவான் இல்லையானால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை கூறுவான். அவனுக்கு ஜானுவை எதனால் பிடிக்குமென்று அவனுக்கே தெரியாது ஆனால் பிடிக்கும் அதிகம் பிடிக்கும். அதுதான் அழகு! ஒரு வேளை இதனால்தான் பிடிக்குமென்று பிடித்தலுக்கான காரணத்தை வைத்திருந்தால் அது காலப்போக்கில் காதலை குறைக்க வாய்ப்பதிகம்.
பெரும்பாலும் காதல் நிறைவேறவில்லை என்றால் தன்னை வருத்திப்பது, காதலித்தவரை வெறுப்பது, அவர்களை துன்புறுத்துவது, வன்முறையில் ஈடுபடுவதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது ஆனால் ராம் அப்படி அல்ல! அவன் ஜானுவை வெறுக்கவே தெரியாதென்னும் அளவுக்கு காதலிக்கிறான். ஜானுவை நீங்கள் வெறுக்க சொல்லி சொன்னாலும் மேலும் அதிகமாக காதலிக்கத்தான் தொடங்குவானே தவிர வெறுக்கமாட்டான்.
கவிஞர் தாமரை எழுதிய ஒரு வரிதான் ராமுக்கு ஜானு “நீ என் உயிரின் விழா”
ஜானுவின் வருகையை திரையில் கண்டபோது நாம் பூரித்ததற்கு காரணம், ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு பார்வையிலும் ராம் ஜானுவை பற்றி வெளிப்படுத்திய அன்பின் விதமும் இப்படியெல்லாம் ராம் கூறிய அந்த ஜானு யார்? என்ற நம்மின் வியப்பும்தான். இராமால்தான் ஜானு நமக்கு அவ்வளவு அழகாய் தெரிந்தாள். ஆனால் ஜானுவால்தான் நான் அழகாய்தெரிந்தேன் என்பான் ராம்.
“எப்பவாச்சும் ரேடியோவுல பாட்ட கேட்டா, அட! இது நம்ம ஜானு பாடின பாட்டுனுதான் முதல நியாபகம் வரும்”னு பத்தவாது படிக்குறப்ப சொன்ன ராம் இப்போ வயசு கடந்து இந்த மாடர்ன் டெக்னாலஜில கூட பாடல்கள கேட்டா முதலில் நியாபகம் வருவது “இது நம்ம ஜானு பாடின பாட்டுனுதான்” சொல்லுவான்.
காலங்கள் கடந்தும் ராமின் காதல் அவன் செய்கையில் தினம் பூத்துக்கொண்டுதானிருக்கிறது. அவனில் இருக்கும் அவள் நினைவுகள் செழித்து கொண்டுதானிருக்கிறது.
ராம் ஜானுவிடமே தேங்கியிருப்பதை பற்றி நீங்கள் கேட்டால்?
ராம் ஒரு இடத்தில் “ஜானுமாதிரி ஒரு பொன்ன LOVE பண்ணிட்டு இன்னொரு பொன்ன எப்படி LOVE பண்ண முடியும்”னு சொல்வான். இது ஜானுவை பற்றியானதல்ல ஜானுவின் மீதான ராமின் காதலை பற்றியது. ஜானுக்கு ராம் தந்தது தனது வாழ்நாளின் முழு காதலையும், இவ்வாறு ஒருத்தியை காதலித்துவிட்டோம் என்ற எண்ணத்தினால்தான் சுயவெறுப்பும் ராமிடம் நிகழவில்லை.
ராம் விரும்பிதான் ஜானுவ விட்ட இடத்துலயே நிற்கிறான். அவன் அடுத்த காதல்களை முன்னேடுக்க விரும்பவில்லை ஏனேனில் ராம் ஜானுவை தன்னுயிரின் திருவிழாவாக்கி அதை வாழ்நாள் முழுவதும் கொண்டாடிக்கொண்டிருப்பவன். அவள் உடனிருந்தாலும் இல்லாமலிருந்தாலும் ராம் நாள்தோறும் கொண்டாடும் திருவிழாதான் ஜானு.
தூசி படிந்த கண்ணாடிகளில், நீர் படிந்த தட்டுகளில், மழையில் நனைந்த ஜன்னல் கண்ணாடிகளில், கடலோரம் உள்ள மணல்பரப்புகளில் இன்னமும் ஜானுவின் பெயரை எழுதிப்பார்த்து ஆனந்தம் கொள்கிறவன்தான் ராம்.
ராம் மாதிரியாக இருக்க வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. இன்றைய சூழலில் ராமைப்போல் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. ராம் கொண்டாடப்பட வேண்டியவன். ராம் அனைவராலும் காதலிக்கப்பட வேண்டியவன். ராம் அனைவரையும் நேசிக்கக்கூடியவன்.
நம்மில் பலரும் சில வருடங்களாவது, சில மாதங்களாவது, சில வாரங்களாவது, சில மணிநேரங்களாவது, ஏன் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது ராமின் சாயலில் நிச்சயம் இருந்திருப்போம். ஆம்! உடனில்லாத அவளையோ அவனையோ நாம் நிச்சயம் கொண்டாடிருப்போம் நடந்ததை நினைத்து எப்போதாவது சிரித்திருப்போம், ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்க்கும் அளவிற்கு நிகழ்வுகளை பகிர்ந்திருப்போம்.
ராமின் காதல், காதலுக்கு காதலின் மேல் உள்ள காதல்!
என்னை நானே தேடிக்கொண்டிருப்பவன்
Be the first to comment on "’96’ ராமின் காதல் | The Life of Ram"