‘Kannathil Muthamittal’ Poem by Thasneem

Poem Kannathil Muthamittal

தன் மக்களுக்காகத் தனித்துவிடப்பட்ட பச்சிளம் குழந்தை ஓர் இணைப்பை ஏற்படுத்தி தாய் தந்தை என்ற உறவுகளைப் பெயர்சூட்டியது. மின்னித் திரியும் மின்மினிப்பூச்சியாய் தன் குடும்பத்தில் சுற்றித் திரிந்தவள் தன்னை ஈன்றவளை இனம் கண்டுக்கொள்ள தொடங்கிய பயணம் ஈருயிர்களின் இடையில் பிரிவின் அச்சத்தை ஆர்ப்பரித்தது. அவளது தேடல்கள் நிறைவுற்று தன்னை ஈன்றவளின் அன்பின் ஆழத்தைக் கண்ட நொடி விளங்கியது பாறையின் இடுக்கிலும் நீர் கசியும் என்று. தாய்மையும் தாய்நாடும் ஒரு சேர அவளின் அன்பைப் பரிசோதிக்க தான் ஈன்ற பொக்கிஷத்தை அவளால் இணைந்த உயிர்களிடம் விட்டுவிட்டு ஏக்கங்களை சுமந்து செல்லும் ஓர் உயிரின் உன்னதத்தை கருவாக்கிய மணிரத்னம் அவர்களின் அத்தியாயத்தில் ஓர் அங்கமான கண்ணத்தில் முத்தமிட்டால் என் மனதைக் கவர்ந்ததின் விளைவு!

காரணங்களோடு கைவிடப்பட்ட
சிறு அல்லியாய் நீ
காரணமின்றி கட்டியணைத்து
அலையென உனை தாங்கி
சிறகுலர்த்தும் பறவையாய் உன்
சேட்டைகள் யாவும் ரசித்தேன் கண்ணே

கண் இமைக்கும் நொடிகளிலும்
காயம் படாமல் காத்தேன் உன்னை
மூச்சுக்குழலில் படர்ந்த ராகம் போல்
வாழ்வை இசைக்க செய்தாய் அன்பினால்

ராகத்தில் மயங்கிக் கிடந்த நேரத்தில்
புது ஸ்வரம் ஒன்றை நீ தேட
மூச்சடைத்து திகைத்து நின்றேனடி
உன் தேடல்கள் அவ்வண்ணமே தொடர
என் மூச்சுக்குழலின் அங்கங்களும்
உன்னுடன் கலந்தே இசைக்குதடி

உன் தேடல்கள் கைக்கூட
என் இதயம் படப்படக்குதடி
உன் தாளத்தில் என் ராகம்
தொலைந்து போகும் அச்சத்தால்
உன் தாளமும் என் ராகத்தில் கலந்து
இசைத்தபோது புனர்ஜென்மம் பெற்றேனடி

துரோகங்களும் வஞ்சமும் சூழ வாழ்ந்தாலும்
அவள் கண்களில் தவழ்வது என்னவோ
காதலும் கருணையும்♥

Share with:


About the Author

Thasneem
நிஜங்களை நிழலாக்கி, கற்பனைகளை கருவாக்கி, திரைவழியே தென்படும், உணர்ச்சிக் கிடங்குகளில் புதைந்த காவியம் நான்!

Be the first to comment on "‘Kannathil Muthamittal’ Poem by Thasneem"

Leave a comment

Your email address will not be published.